
ராணிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மொழி குறித்த புரிதல் பாஜகவுக்கு கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியை திணிக்கின்றனர். மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தாய்மொழி தமிழைக் காக்க துடித்துக் கொண்டிருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் மும்மொழி கொள்கை தீவிரமாகும் போது திமுக அரசு அதனை எதிர்ப்பது போல நாடகமாடி கொண்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரி அல்ல. மாநிலத்திற்கு வேண்டிய நிதியை கூட கேட்டுப் பெற முடியாமல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன பயன். தமிழகத்தில் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் மனதால் அப்பா என்று அழைக்கும் உணர்வு வரும். இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதை கட்டாயம் தடுக்க வேண்டும். என்னை மீறி தமிழகத்தில் இந்தியை திணித்து காட்டுங்கள் பார்க்கலாம் என்று மத்திய அரசுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.