
சர்வாதிகாரம் மனநிலை கொண்டவர்கள் மத்தியில் வாழ்வதற்கு அச்சமாக இருக்கிறது என்று இயக்குனர் கோபி நயினார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, “தலித் மக்களுக்கு குடிமனை கேட்டு அவர்களுடைய வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரி போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொது வழியில் இழிவு படுத்தப்படுகிறேன். என்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக் கொள்ளும் ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையாக கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்க்கிறது. இந்த சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்கள் மத்தியில் வாழ்வதற்கு எனக்கு பயமாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் தலித் மக்களுடைய நிலை இதுதான் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு, திராவிட சித்தாந்தவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை. இப்படி கடுமையாக அவமதிக்கப்படும் நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம். இது போன்ற காரணங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு கொடுத்த பெரியார் விருதை நான் திருப்பிக் கொடுக்கிறேன். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போராட்ட உணர்வோடு..” என்று குறிப்பிட்டுள்ளார்.