
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி கல்யாண மண்டபத்தில், ஒரு திருமண விழா முகூர்த்த நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென ரத்து செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் மணப்பெண் பல்லவி, “நான் வேறொருவரை காதலிக்கிறேன்” என நேரடியாக தனது குடும்பத்தினருக்கும், மணமகனான வேணுகோபாலுக்கும் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணத்தைத் தொடர மணமகன் மறுத்துவிட்டார். முதுகலை பட்டதாரியான பல்லவி, அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரியும் வேணுகோபாலுடன் திருமணம் செய்யவிருந்தார்.
சடங்குகள் நடைபெற தயாராக இருந்த வேளையில் பல்லவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அந்த அழைப்பை வாங்கிய பல்லவி, அதற்குப் பிறகு ஒரு அறையில் பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்தார்.
அவரது குடும்பத்தினரும், போலீசாரும் சமாதானம் செய்ய முயற்சி செய்தும், அவர் தனது முடிவில் நிலைத்திருந்தார். பிறகு மணமகனும், பெண்ணின் விருப்பமில்லாமல் திருமணம் செய்வது சரியல்ல என தெரிவித்ததால் திருமணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
முகூர்த்த நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன் திருமணத்தை நிறுத்தியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.” பின்னர், பல்லவி வேறொரு சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.
இருவரது குடும்பங்களும் மன அழுத்தத்தில் சிக்க, கல்யாண மண்டபத்தில் பரபரப்பு நிலவியது. காவல்துறையினர் நிலைமை சீராக இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் பதிவாகவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.