
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கிராமத்தில் நர்சிங் படித்த இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று முன்தினம் நர்சிங் மாணவியின் வீட்டிற்கு பின்புறம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின்.
அந்த நர்சிங் மாணவி கொல்லத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். அந்த மருத்துவமனையில் ஜிதனின் தாத்தா சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. அந்த தாத்தாவை கவனித்துக் கொண்ட போது இளம்பெண்ணுக்கும் ஜிதினுக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இதனை தொடர்ந்து ஜிதின் முறைப்படி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் நிச்சயம் செய்து வைத்தனர். அந்த பெண்ணுக்கும் திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் ஜிதின் காதலியின் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நர்சிங் மாணவி குளியல் அறையில் விஷ மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.