பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.