சென்னையில் இன்று தேமுதிக சார்பில் தமிழக மின்வாரியத்தில் கேங்க்மேன் தொழிலாளர்களை ‌ கள உதவியாளராக அறிவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கலைஞருக்கு மத்திய அரசின் துணையோடு 100 ரூபாய் நாணயத்தை திமுக அரசு வெளியிட்டுள்ளது. கலைஞருக்கு நாணயம் வெளியிட்டதை நான் வரவேற்கிறேன். அவருடைய பணிகள் போற்றக்கூடியவை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அதேசமயம் திமுகவுக்கு வேண்டுமென்றால் பாஜகவை ஆதரிக்கிறார்கள். இல்லையெனில் அவதூறு பரப்புகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்.? முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது மத்திய அமைச்சரை அழைத்து வந்து தன்னுடைய தந்தைக்கு நாணயம் வெளியிட்டுள்ளார். இதிலிருந்து வேண்டுமென்றால் ஒரு நிலைப்பாடும் வேண்டாம் என்றால் மற்றொரு நிலைப்பாடு திமுக எடுக்கிறது என்பது தெரிய வருகிறது. மேலும் பாஜகவை சங்கி என்று விமர்சிக்கும் திமுக தனக்கு தேவைப்படும்போது மட்டும் அரவணைத்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.