
ராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டம், நந்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்த கந்தகரைச் சேர்ந்த இளைஞர் முபாரக் என்பவர், திடீரென நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தன்று, பண்ணை வீட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் குதித்து சாகசம் செய்ய முயன்ற முபாரக், தண்ணீரில் குதித்தவுடன் சில வினாடிகளில் மூழ்கி விட்டார். அதன்பின் அவர் மீண்டும் மேலே வரவில்லை. சுமார் 10 வினாடிகள் கழித்து அவர் தலைகீழாக தண்ணீரில் மிதந்த நிலையில் மீண்டும் தோன்றியதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
சம்பவத்தின் போது, நீச்சல் குளத்திற்கு வெளியே நின்றிருந்த நண்பர்கள், முபாரக் குளத்தில் குதிக்கும் காட்சியை தங்கள் மொபைல் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர் மேலே வராததை கவனித்ததும், பரபரப்புடன் குளத்தில் இறங்கி அவரை வெளியே எடுத்தனர். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
முபாரக்கின் மரணம் அமைதியான தாக்குதலால் (Silent heart attack) ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும், மரணத்தின் காரணம் குறித்து உறுதி செய்ய பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. இளைஞரின் மரணம் அவரது குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகசங்களுக்காக பாதுகாப்பின்றி செயல் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.