
சென்னை மாவட்டம் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 17 வயது மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மற்றொரு சிறுவன் 17 வயது சிறுவனிடம் முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும் நேரில் வருமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு இன்ஸ்டா நண்பர் கூறிய டீக்கடை முன்பு 17 வயது சிறுவன் காத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒரு வாலிபர் அவசரமாக செல்ல வேண்டும் என சிறுவனிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு ஆட்டோ முன்பு நிறுத்துமாறு வாலிபர் கூறியுள்ளார். இதனால் சிறுவனும் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அந்த நபரும் ஆட்டோவில் இருந்து 3 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி சிறுவனை கடத்தி சென்றனர்.
பின்னர் ஒரு வாரத்தில் 1 லட்ச ரூபாய் பணமும் 100 கிராம் தங்க நகையும் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சிறுவனை விட்டு சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுவனை மிரட்டிய வசந்தகுமார், அவரது நண்பர்களான பரத், ரஞ்சித், 17 வயது சிறுவன் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் இன்ஸ்டாகிராம் நண்பர்களே மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.