
திபெத்தின் புத்தமதத் தலைவரும் உலக அமைதியின் தூதராக வணங்கப்படும் தலாய் லாமா, இன்று (ஜூலை 6) தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் மேக்லியாட் கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள புத்தமத வழிபாட்டு மையத்தில், அவருக்காக சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திபெத் மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தலாய் லாமா நேரில் நிகழ்வில் கலந்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, உருக்கமான உரையையும் நிகழ்த்தினார்.
“எனது வாழ்க்கையில், பல நன்மைகளைச் செய்ய முடியவந்ததே என் பெருமை. கடவுள் எனக்கு ஆசீர்வதித்துள்ளார் என்று உணர்கிறேன்.
இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் பலனளித்துள்ளது,” என்றார் தலாய் லாமா.
திபெத் நாடு 1959ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர், தலாய் லாமா இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தார். அவருடன் லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் புலம்பெயர்ந்தனர். இவர்கள் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது தலாய் லாமா, தர்மசாலா பகுதியில் வசித்து, திபெத் சமூகத்தின் நலனுக்காக பணியாற்றி வருகிறார்.
“நமது தாய்நாட்டை இழந்தபோதும், இந்தியாவில் அமைதியாக வாழ வழிவகுத்துள்ள இந்த மகா தேசத்திற்கு நன்றி. தர்மசாலாவில் வாழும் மக்களுக்கு சேவை செய்வது என் கடமையாக உள்ளது” என உரையாற்றினார் தலாய் லாமா.
இந்த நிகழ்வின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறன. அவரது ஆரோக்கிய வாழ்வு மற்றும் அமைதி தூதுவாய் தொடர்ந்து இருப்பதற்காக உலகமெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.