
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தியா பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்து, சிந்து நக நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டது. இதே போல பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. இருநாட்டு அரசுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என அந்த நாட்டு உளவுத்துறை பாகிஸ்தானை எச்சரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறியதாவது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரம் மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தின் வடிவங்களை பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது. நடுநிலையான விசாரணை குழுவை அமைத்து நம்பகமான, வெளிப்படைமையான, சுதந்திரமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் முன்வந்தபோதும் இந்தியா விசாரணையை தவிர்த்து மோதல் பாதையை தேர்ந்தெடுத்தது.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கும் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளில் பொறுப்பு இந்தியாவையே சேரும் என கூறியுள்ளார். உயர்மட்ட ஆலோசனை குழுவில் பேசிய பிரதமர் மோடி எதிரிக்கு பதிலடி தர இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் ராணுவத்திற்கு உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக மரண அடி கொடுக்க வேண்டியது நமது நாட்டின் உறுதிப்பாடு என கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.