ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நாளில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கூறியதாவது, காஷ்மீர் எப்பொழுதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் இருக்கும். எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதலை தடுக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பிரதமருக்கு ஆதரவாக நிற்பது அவசியம்.

நாடு பிரிக்கப்பட்ட போது பாகிஸ்தானில் உள்ள அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று ஜின்னா கூறினார். இப்போது அங்கு உள்ள லட்சக்கணக்கான இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் எவ்வளவு முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு இந்தியாவிலும் இருக்கிறார்கள்.

இந்துக்கள் பாகுபாடு காட்டினால் இவ்வளவு முஸ்லிம்கள் இங்கே இருக்க முடியுமா? இந்துக்களுக்கான ஒரே நாடு தான் இந்தியா. அவர்கள் இங்கே கொல்லப்பட்டால் எங்கு செல்வார்கள்? இந்துக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டாமா? மத சார்பின்மைக்கு வார்த்தை ஜாலங்களை உபயோகப்படுத்தாதீர்கள்.

தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்துவதை நாங்கள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். உண்மையை பேசினால் வெறுப்பு என்று அர்த்தம் இல்லை. அது பயங்கரவாதிகள் மீதான வெறுப்பு மட்டும்தான். நம் நாட்டில் முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள். நாம் எப்போதாவது அவர்கள் மீது வெறுப்பை காட்டி இருக்கிறோமா?

26 பேரை சுட்டு கொலை செய்த பிறகும் அந்த பயங்கரவாதிகளுக்கும் அவர்களை ஊக்குவித்த பாகிஸ்தான் நாட்டுக்கும் இங்கு ஆதரவாக பேசுவது தவறான விஷயம். நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்று விடுங்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வது அவசியம் என கூறியுள்ளார்.