
தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் அரசாணை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 5-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில், இந்தத் தீர்மானத்தை அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை 05.06.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அரசாணை (டி) எண்.207-ஐ 08.05.2025 அன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனையும், வணிக வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் அனைவரும் நேர அடிப்படையில் சுதந்திரமாக வசதியை அனுபவிக்க முடியும்.
முந்தைய அரசாணை ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் மூன்று ஆண்டுகள் தொடரும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.