
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த நாட்டின் அமைச்சரே கடந்த 30 வருடங்களாக தீவிரவாதிகளுக்கு தாங்கள் உதவி செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு மத்திய அரசாங்கம் பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததோடு சிந்து நதி நீரையும் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா பாகிஸ்தான் மீது அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ராணுவ விமானங்கள் உட்பட அனைத்து வகை விமானங்களுக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி இனி இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே நேரடி விமான சேவைகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த உத்தரவால் பாகிஸ்தானில் இனி விமான கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.