சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற வாலிபர் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மருத்துவமனை பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அந்த வகையில் நோயாளிகளுடன் வருபவர்களையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். நோயாளிகளை அழைத்து வருபவர்களின் கையில் ஒரு அடையாள டேக் கட்டப்படும். அதில் அவர் எந்த நோயாளியை பார்க்க வந்தவர்? அவர் எந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்? என்ற விவரம் இருக்கும் கையில் டேக் கட்டி இருந்தால் மட்டுமே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் பார்வையாளர்கள் நோயாளிகளை பார்க்க வரும்போது அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே உள்ளே செல்ல முடியும். இந்த நடைமுறை தமிழக முழுவதும் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்படுகிறது. இதனால் எல்லா நேரங்களிலும் இஷ்டம்போல் மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல முடியாது. ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மருத்துவமனைகளிலும் உடனடியாக இதனை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.