
10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் குறித்து முக்கியமான அறிவிப்பை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, வரும் கல்வியாண்டில் இருந்து 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரு பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெறுகிறார்கள். ஆனால், இதில் ஒரு தேர்வு கட்டாயமாக எழுத வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் தகுதி அளவுகள் பின்வருமாறு:
அனைத்து மாணவர்களும் முதல் பொதுத் தேர்வை கட்டாயமாக எழுதவேண்டும்.
முதல் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இரண்டாம் பொதுத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
இரண்டாவது தேர்வில், அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்ய முடியும்.
முதல் தேர்வில் மூன்று பாடங்களுக்கும் மேல் புறக்கணித்தால், அவர்கள் “அத்தியாவசிய ரிபீட் (Essential Repeat)” எனக் கருதப்படுவர்.
அத்தகைய மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் தேர்வை மட்டும் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு கூடுதல் பாடங்கள் தேர்வு செய்ய இயலாது. தனிப்பாட தேர்வுகள் கிடையாது.
சிறப்பு சலுகைகள்:
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, போட்டி தேதிகள் மற்றும் தேர்வு தேதிகள் மோசமாகும் பட்சத்தில், இரண்டாவது பொதுத் தேர்வில் எழுத அனுமதி வழங்கப்படும்.
குளிர்கால பாதிப்பு உள்ள மாநிலங்களின் மாணவர்கள், இரண்டிலும் ஒன்றை தேர்வு செய்து எழுதலாம்.
சிறப்பு தேவை (Special Needs) மாணவர்களுக்கு அதற்கேற்ப சலுகைகள் வழங்கப்படும். இது இரண்டாம் பொதுத் தேர்வுக்கும் பொருந்தும்.
தேர்வு காலஅட்டவணை மற்றும் முடிவுகள்:
முதல் பொதுத் தேர்வு பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கும்.
இரண்டாவது தேர்வு மே மாதத்தில் நடைபெறும்.
இரு தேர்வுகளுக்கும் முழு பாடத்திட்டமே அடிப்படையாக அமையும். படிப்புத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதல் தேர்வின் முடிவு ஏப்ரல் மாதம், இரண்டாவது தேர்வின் முடிவு ஜூன் மாதம் வெளியிடப்படும்.
உள் மதிப்பீடு (Internal Assessment) பிப்ரவரி தேர்வுக்கே முன்னுரிமையாக நடத்தப்படும்.
இந்த புதிய முறைமைகள், மாணவர்கள் தேர்வுகளை அதிகம் பயப்படாமல் எழுத முடியும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை பயின்று தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இப்போது வலியுறுத்தப்படுகிறது.