கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அரளி பூ மற்றும் அதன் இலையில் விஷத்தன்மை இருப்பதை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தின் போது திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி பூஜைக்கு அரளிப்பூ மற்றும் இலைகளை பயன்படுத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரசித்தி பெற்ற சபரிமலை கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் பூஜைக்கு அரளிப்பூ பயன்படுத்துவது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மருத்துவ குணம் நிறைந்த துளசி மற்றும் வேறு பூக்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் இருக்கும் அரளிப்பூ தோட்டத்தை அப்புறப்படுத்தி விட்டு அதற்கு பதிலாக வேறு தோட்டம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.