தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் பாடம் நடத்தக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையின் படி பாடம் நடத்துவதற்கு 13 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை சமாளிப்பதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தாலும் பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ஒரு சில பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களை மாணவர்களுக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் சிறப்பு பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்த வேண்டும் என்றும் தன்னார்வலர்களை பாடம் நடத்த பயன்படுத்தினால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.