நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பல பேர் குடிநீர் வரி, வீட்டு வரி ஆகியவை மின்னணு முறையில் செலுத்துவது வழக்கமாகி விட்டது. அதோடு மின்சார கட்டணம் கூட தற்போது ஆன்லைன் வாயிலாக செலுத்துகின்றனர். எனினும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி, நில வரி உட்பட பல வரி மற்றும் கட்டணங்களை மக்கள் பெரும்பாலும் பணமாக செலுத்துகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்துவது கட்டாயம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக கடிதம் எழுதியிருக்கிறது. அதில், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அனைத்து ஊராட்சிகளிலும் யுபிஐ வசதி கொண்ட ஊராட்சிகளாக அறிவிக்கவேண்டும். இதை முதல்வர், எம்பி, எம்எல்ஏ ஆகிய முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் துவங்கி வைக்கவேண்டும்.

அத்துடன் யுபிஐ வாயிலாக பணம் செலுத்தும் வசதியை அளிக்கும் கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம், மொபிக்விக், வாட்ஸ்அப் பே, அமேசான் பே, பாரத் பே உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை இன்று (ஜூன் 30) அன்று அழைத்து பேச வேண்டும். இதில் தங்களுக்கு பொருத்தமான நிறுவனத்தை ஜூலை 15-ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஊராட்சி முழுவதும் இயங்கும் ஒரே நிறுவனத்தை தேர்வு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின் யுபிஐ வசதியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட, வட்ட அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படவேண்டும். பணம் செலுத்துவதை சரியான முறையில் கண்காணித்து வரவேண்டும் என தெரிவித்து உள்ளது.