
தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் தலையிட்டு சுமூகமான தீர்வை கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சகோதர நோக்கத்துடன் பழகும் இந்து முஸ்லிம்களிடம் பிரச்சனைகளை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் சின்னம் பற்றிய விசாரணையில் தலையிடலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது எங்களுடைய வெற்றிக்கு முதல் தொடக்கம் என்றும் புரட்சித் தலைவி அம்மா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்று எடப்பாடி செயல்படுகின்றார் என ஆர்பி உதயகுமார் கூறியிருந்தார். அவர் எப்போதுமே காமெடி செய்து கொண்டே இருப்பார். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்ஜிஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது.
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு விதை போட்டவர் புரட்சித்தலைவி அம்மா தான். இந்த விவகாரத்தில் செங்கோட்டையன் எடுத்துள்ள முடிவு அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும். தந்தை பெரியார் குறித்து பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை இல்லை. தங்களுடைய சுய விளம்பரத்திற்காக ஒரு சிலர் பெரியார் பற்றி அவதூறு பேசி வருகிறார்கள் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.