இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் சையத் அபித் அலி (Syed Abid Ali) அமெரிக்காவில் தனது 83வது வயதில் காலமானார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அபித் அலி, இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது முதல் டெஸ்ட் போட்டியில் (Brisbane, Australia) ஆறு விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு வீழ்த்தி இந்திய அணிக்கு முக்கியமான சேவையை ஆற்றி இருந்தார். கடந்த  1971 இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக இறுதியாக ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

அபித் அலி தனது 22 ஆண்டு கால முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்கு மட்டுமின்றி ஹைதராபாத் மற்றும் தெற்கு மண்டல அணிக்காகவும் முக்கிய பங்கு வகித்தார். 1978 முதல் பயிற்சியாளராக செயல்பட்ட அபித், 2001ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணியின் கோச்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே, ஆந்திர கிரிக்கெட் அணியை வலுவான அணியாக மாற்றியிருந்த அவரது திறமையால், UAE அணியையும் அடிப்படையிலிருந்து வளர்த்துவைக்க முடிந்தது. மேலும், இவர் மாலத்தீவு மற்றும் ஆந்திர ரஞ்சி அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு அபித் அலி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, தவறான தகவலால் இந்திய கிரிக்கெட் உலகம் அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்தது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, முன்னாள் சக வீரர்கள் மற்றும் ஊடகங்கள் அவரை அனுதாபத்துடன் நினைவுகூர்ந்தனர். ஒரு பத்திரிகையாளர் கூட நேரடியாக அவரை அழைத்து, “நீங்கள் உயிரோடே இருக்கிறீர்களா?” என்று கேட்டதாக பின் வெளிவந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. அபித் அலி தனது முழு வாழ்க்கையும் கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்தவர் என்றும், அவரது சேவையை இந்திய கிரிக்கெட் உலகம் என்றும் நினைவுகூரும் என்றும் விளையாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.