மேற்கு இந்திய தீவுகள் (West Indies) அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபட்ஸ் (Andy Roberts), ஐசிசி (ICC) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி (Champions Trophy 2025) தொடரில், இந்தியா ஒரே திடலில் விளையாடியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது, ஆனால் மற்ற அணிகள் பாகிஸ்தான், துபாய்  உள்ளிட்ட இடங்களில் மாறி மாறி விளையாட நேரிட்டது. ஆனால் இந்திய அணிக்கு தனி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ராபட்ஸ் குற்றம் சுமத்தி, “ஐசிசி சர்வதேச கிரிக்கெட் வாரியமாக அல்ல, இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படுகிறது” எனக் கூறினார்.

“ஒரு தொடரில் எப்படி ஒரு அணிக்கு மட்டும் பயணிக்க வேண்டிய அவசியமே ஏற்படாது? கடந்த T20 உலகக் கோப்பையிலும் (T20 World Cup 2024) இதே மாதிரி நடந்தது. இந்திய அணி எந்த இடத்தில் விளையாட வேண்டும், எங்கு விளையாடக்கூடாது என்பதை ஐசிசி இந்தியாவுக்கே சாதகமாக முடிவு செய்கிறது” என்று அவர் விமர்சித்தார். ஐசிசி, இந்தியாவுக்கு எதிராக ‘இல்லை’ என்று சொல்லி பழக வேண்டும் என்றும், “இந்தியா நாளை கிரிக்கெட்டில் வைடு மற்றும் நோ பால் ஆகியவற்றை நீக்கிவிட வேண்டும் என்று கூறினால், ஐசிசி அதை உடனே நிறைவேற்றும்” என்ற கருத்தையும் பகிர்ந்தார்.

“கிரிக்கெட் ஒரு நாட்டுக்காக மட்டுமே இருக்கக் கூடாது” என ராபட்ஸ் கூறினார். “இந்தியாவின் ஆதிக்கம் தாண்டி, மற்ற அணிகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகள் இந்திய அணி துபாயில் மட்டும் விளையாடுவதற்கு ஏதேனும் சலுகை உள்ளதாக கூறினாலும், இந்திய வீரர்கள் இதை மறுத்துவிட்டனர். ஏற்கனவே, ஐசிசி மீது பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஆண்டி ராபட்ஸ் கொடுத்த இந்த கருத்து புதிய விவாதத்துக்கு காரணமாக இருக்கலாம்.