கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர் குழுக்கள் இந்திய வலைத்தளங்களை குறிவைத்து தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை நடத்துகிறது. இந்த தாக்குதல்களை இந்தியாவின் பல்வேறு சைபர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மாநில போலீசார் விரைவாக கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சைபர் குரூப் ‘HOAX1337’, ‘நேஷனல் சைபர் க்ரூ’ உள்ளிட்ட குழுக்கள் இந்திய ராணுவ பள்ளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சுகாதார சேவை வலைத்தளங்களை குறிவைத்து அவற்றை அவமதிக்கும் விதத்தில் தாக்க முயற்சிசெய்தனர். மேலும், ராணுவ ஹோட்டல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் விமானப்படை வீரர்களின் தளங்களும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களைப் பற்றி அவமதிக்கக்கூடிய பதிவுகளுடன் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி மகாராஷ்டிரா சைபர் போலீசார் தெரிவித்ததாவது, கடந்த சில நாட்களில் மட்டும் பாகிஸ்தானைத் தவிர, மத்திய கிழக்கு, இந்தோனேசியா மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளிலிருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் இந்திய தளங்களுக்கு எதிராக நடந்துள்ளன. இவை பெரும்பாலும் இஸ்லாமிய தீவிரவாத சித்தாந்தங்களை பின்பற்றும் ஹேக்கர் குழுக்களால் ஒருங்கிணைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் “ஹைபிரிட் வார்ஃபேர்” உத்தியில் ஒரு பகுதியாக இவை செயல்படுகின்றன என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிதித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையை அடுத்து, தேசிய அளவிலான கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைப்புகள், பாதுகாப்பு துறைக்குட்பட்ட அனைத்து இணைய தளங்களிலும் உயர் அளவிலான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் வன்முறை தூண்டும் வகையில் போடப்படும் போலியான தகவல்களும் தற்போது கவனிக்கப்படுகின்றன. சைபர் தாக்குதல்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக மத்திய உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.