
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இருப்பினும் அனைத்து தாக்குதலையும் இந்தியா தகர்த்தெறிந்தது. இரு நாடுகளும் போரை கைவிட வேண்டும் என அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகள் மற்றும் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோருடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமருடனான ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.