‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கூரைகளில் செஞ்சிலுவைச் சங்க சின்னங்கள் வரையும் பணி தொடங்கியது.

இது, வான்வழி தாக்குதல்களில் மருத்துவமனைகளை குறி வைக்க கூடாது என்பதற்கான ஒரு சிறப்பான பாதுகாப்பு அடையாளமாக செயல்படுகிறது. இந்த நடவடிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா ஒப்பந்த விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் அல்லது ஆயுத மோதலின் நேரத்தில் பொதுமக்கள், மருத்துவ உதவிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் கீழ், குப்வாரா, பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் மேல்பாகத்தில் இந்த சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதிலிருந்து எல்லை பகுதிகளில் நிலவும் நிலைமை மிகவும் பதற்றமடைந்துள்ளது.

இந்தியா, இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை ஆதரிக்கும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவர்களின் முகாம்கள் தான் காரணம் எனக் கூறி, பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஸ்மீர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பெரும் அளவில் குண்டுவீச்சு நடத்தியதாகவும், எதிர்காலத்தில் மேலும் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைகள் குறிவைக்கப்படாமல் இருக்க ஜெனீவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சின்னம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.