
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலுக்குப் பிறகு, போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது முயற்சிகள் காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கண்டனம் தெரிவித்து, “எல்லாவற்றிற்கும் பெருமையை தனக்கு சேர்ப்பது டிரம்ப் வழக்கம்” என விளாசினார்.
அதாவது கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா மேற்கொண்ட தாக்குதல்கள் முழுமையாக நியாயமானவை என அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் எல்லைக்குள் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்துவருவதை கண்டித்த அவர், “இந்தியா தற்காப்புக்காக தாக்கும் உரிமையுடைய நாடு” என்றும் கூறினார்.
போர் நிறுத்தத்தை டிரம்ப் நடத்தியதாகக் கூறுவது இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்றும், இது அவரது பழக்கவழக்கம் மட்டுமே என அவர் விளக்கம் அளித்தார். “மற்றவர்களுக்கு பெருமை கிடைக்காமலிருப்பதற்காக முன் வந்து அதை தன் பெயரில் பதிவு செய்து கொள்வது டிரம்ப் தன்மை. இது எரிச்சலூட்டலாம், ஆனால் இந்தியாவை குறிவைக்கவில்லை,” என்றார் போல்டன்.
மேலும், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமாக தெரிவிக்க, அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பும் திட்டத்தையும் அவர் வரவேற்றார். “அப்பாவி பொதுமக்கள் தாக்குதல்களால் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் ராணுவத் தளபதி அசிம் முனீர் பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றது ஒரு “தொந்தரவு தரும் அறிகுறி” எனக் கூறிய போல்டன், அந்நாட்டின் உள்நாட்டு நிலவரம் குறித்து கவலை தெரிவித்தார். “இம்ரான் கான் சிறையில் இருக்கிறார். கருத்து வேறுபாடுகள் அடக்கப்படுகின்றன. இது பாகிஸ்தானுக்கே நல்லதல்ல. அமெரிக்க அரசு இதற்குத் தக்க அழுத்தத்தை கொடுக்க வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.