
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியைத் தொடர்ந்து, தனது ‘மன் கி பாத்’ வானொலி உரையின் 122வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
மே 25 அன்று ஒளிபரப்பான இந்த உரையில், எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலை மக்களுக்கும் உலகத்துக்கும் கூறினார். இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலை பாராட்டினார்.
“இந்த தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா காட்டும் உறுதியின் சின்னம். முழு நாடும் இன்று பயங்கரவாதத்தை வேரறுக்க உறுதியுடன் இருக்கிறது,” என்று பிரதமர் தெரிவித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெறும் ராணுவ நடவடிக்கையாக அல்ல, இந்தியாவின் மூலோபாய தெளிவு மற்றும் நெறிமுறைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கான ஒரு செய்தியாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தேசபக்தி உணர்வு பெருகி வருவதாகவும், பல இடங்களில் திரங்கா யாத்திரைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், “சதிகாரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்.
நம் வீரர்களின் தியாகம் வீணாகாது” என உறுதியளித்தார். பாகிஸ்தான் மற்றும் PoK-வில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மே 7 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் அழிக்கப்பட்டன. இது, இந்தியாவின் பாதுகாப்பு உள்துறையில் ஒரு வலுவான மாற்றத்தை காட்டுகிறது என நாட்டு மக்கள் பெருமிதத்துடன் பார்ப்பதாக கூறியுள்ளார்.