ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை உலுக்கியது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதலை தொடங்கியது. இந்த நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலாக, பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய எல்லைகளில் அனுப்பியது. ஆனால், இந்தியா அதற்கும் தக்க பதிலடி கொடுத்த நிலையில், இருநாடுகளிடையே தற்காலிக மத்தியஸ்தம் ஏற்பட்டு தாக்குதல் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. எனினும், இருபுறத்திலும் பதற்றம் குறையாமல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர். சிங் வெளியிட்டுள்ள கருத்து அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. “நமக்குத் தெரியாத ஒரு மூன்றாவது எதிரி சீனாவே. பாகிஸ்தான் சீனாவால் ஆயுத சோதனை மையமாக பயன்படுத்தப்படுகிறது. பாக் ராணுவத்தில் உள்ள ஆயுதங்களில் 81% ஆயுதங்கள் சீனாவில் இருந்து வழங்கப்பட்டவை.

இதனுடன் துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வருகிறது,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானில் 21 பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

“>

 

இதேநேரத்தில், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட அறிக்கையின்படி, 2015 முதல் சீனா பாகிஸ்தானுக்கு 8.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்த பரிவர்த்தனையில், JF-17 தண்டர், J-10C போர் விமானங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

தற்போது பாகிஸ்தான், 40 ஐந்தாம் தலைமுறை J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை சீனாவில் இருந்து வாங்க உள்ளதாகவும், இது ஸ்டெல்த் போர் திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தானை இணைத்துவைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு எதிராக, 2025 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) அறிக்கையில், “இந்தியாவுக்கு முதன்மை எதிரியாக சீனா இருக்கிறது. பாகிஸ்தான் ஒரு துணை பாதுகாப்பு பிரச்சனை மட்டுமே,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்தியா இரட்டை ஆபத்துகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், தொழில்நுட்பம், உளவுத்துறை மற்றும் ராணுவ ரீதியில் வலுப்பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.