
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பின் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு மேலும் 4 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவரை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள தேசத்தின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவுடன் 45 பேருக்கு பிடிவாரண்ட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவர் வருகிற நவம்பர் 18-ம் தேதி கோர்ட்டில் ஆஜாராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்ததால் இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். இதனிடையே ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேசம் அதிக அழுத்தம் இந்தியாவிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.