லெபனானில் பேஜர் தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, இந்தியாவில் கண்காணிப்பு கேமரா தயாரிப்புகளுக்கான புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின் மூலம், இந்திய சந்தையில் இருந்து சீன நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களை நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு, அவற்றின் மூலம் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை ஹேக் செய்து தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதால், மத்திய அரசு உள்நாட்டு மற்றும் நம்பகமான நாடுகளின் நிறுவனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. 2022ல், அமெரிக்க தொலைதொடர்பு கமிஷன் சீன நிறுவனங்கள் ஹிக்விஷன் மற்றும் தாஹுவாவின் விற்பனைக்கு தடை விதித்தது, ஏனெனில் இந்த நிறுவனங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என கருதப்பட்டது.

இந்திய சந்தையில், சிபி பிளஸ், ஹிக்விஷன், தாஹுவா ஆகிய மூன்று நிறுவனங்கள் கண்காணிப்பு கேமரா வியாபாரத்தில் 60 சதவீதத்தை தக்கவைத்து வருகின்றன. இதில், ஹிக்விஷன் மற்றும் தாஹுவா சீன நிறுவனங்களாகும். இந்திய சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைத்து, உள்நாட்டு நிறுவனங்கள் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு சிசிடிவி கேமராக்களைப் பற்றிய புதிய கொள்கையை விரைவில் கொண்டு வர உள்ளது.