
சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று அகில இந்திய குற்றவியல் மாநாடு நடைபெற்றது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படி இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் 2.71 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு 4.28 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. அதன் பிறகு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதற்கான காரணம் அவர்களுக்கே நன்றாக தெரியும். இந்தியாவில் வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது மிகக் குறைவு தான். தமிழகத்தில் அரசின் கொள்கைகள், சட்டங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதில் அரசு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. திமுக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் சட்டசபையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படும் பரிந்துரைகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார்.