கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், நான் சவாலாக சொல்கின்றேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்கின்ற அரசு உள்ளதா. ஒரு மாநிலம் வளர்கிறது என்றால் அந்த மாநிலத்தை உள்ளடக்கிய ஒன்றிய அரசு மகிழ்ச்சி அடைய வேண்டும். அதுதான் உண்மையான கூட்டாட்சி தத்துவம். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் அதன் மூலம் நாடும் வளர்ச்சி அடையும். மாநிலத்தின் வளர்ச்சியால் நாடு தான் பலன் பெறும், நாடு தான் பலம் பெறும். ஆனால் இன்று ஒன்றியத்தை ஆளக்கூடிய அரசு மாநிலங்களில் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய அரசாகத்தான் உள்ளது.

மாநிலங்களில் வளர்ச்சியை தடுக்க கூடிய அரசாக திகழ்கிறது. ஜிஎஸ்டி மூலமாக நம் மாநிலத்தின் வரியை மொத்தமாக சுரண்டினார்கள். மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கின்றனர். இருந்தாலும் இது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் நாம் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றோம். அதையும் தாண்டி வளர்கிறோம், வளர்ந்து கொண்டிருக்கின்றோம். அதுதான் அவர்களுடைய கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றது. அதை தடுக்க பல்வேறு தடைகளையும் உருவாக்குகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நம் பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவதை தடுக்க பார்க்கின்றனர் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.