
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆக பொறுப்பேற்றார். கேரளாவில் முதல் முறையாக பாஜக காலடி பதித்துள்ள நிலையில் அந்த வெற்றிக்கு காரணமான சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி வழங்கி பாஜக அழகு பார்த்துள்ளது. அதன்படி இவருக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சுரேஷ் கோபி கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான கருணாகரன் ஒரு தைரியமான தலைவர். இவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் EK நாயனாரும் என்னுடைய அரசியல் குருக்கள் என்று கூறினார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பாஜக கட்சி இன்றளவும் விமர்சித்து வரும் நிலையில் அவரை இந்தியாவின் அன்னை என்று சுரேஷ்கோபி புகழாரம் சூட்டியதோடு காங்கிரஸ் தலைவர்களையும் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.