
2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். வருமானவரி விலக்கு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இப்படியான நிலையில் இன்று செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு வரியே இல்லை என்பது கொண்டாடப்படக்கூடிய பட்ஜெட் தான் இது. இங்கு என்ன கொடுத்தாலும் அது பற்றாக்குறையாக தான் தெரியும், அதே மாதிரி என்ன கொடுத்தாலும் அது திருப்திகரமாக இருக்காது. மாணவர்களுக்கும், மருத்துவத்துறை, வேளாண் மற்றும் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்குமான பட்ஜெட் தான் இது.
புதிய தொழில் தொடங்க மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கி உள்ளதால் இளைஞர்கள் இதில் அதிகம் பயன்பெறுவார்கள். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவ்வளவு அழகாக திருக்குறளை அவர் முன்னெடுத்துள்ளார். இதனைக் கண்டு தமிழர்களாகிய நாம் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும். ஆனால் தமிழுக்கு எந்த ஒரு மகுடம் சூட்டினாலும் அது கனிமொழி போன்றவர்களுக்கு பிடிக்காது என்பது நன்றாக தெரிகிறது. உங்களைவிட தமிழகத்தின் மீது பாஜக அதிகமாகவே அக்கறை கொண்டுள்ளது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.