திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணாநகர் 1-வது வீதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்துக்கடையில், ஜோலி அகஸ்டின் என்ற நபர் மருத்துவ படிப்பு எதுவும் படிக்காதபோதிலும், பொதுமக்களுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் செலுத்துவது உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கி வந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறை மற்றும் போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பின்புற அறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருந்ததும், அவரிடம் மருத்துவ சான்றிதழ்கள் இல்லாததும் உறுதியானது.

இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரனையில் ஜோலி அகஸ்டின், கேரளாவில் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், கடந்த 18 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவராக நடித்து சிகிச்சை அளித்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில், 2017 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளிலும் அவர் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது இது மூன்றாவது முறையாக அவர் சிக்கிய நிலையில், அவரது மருந்துக் கடையும் கிளினிக்கும் அதிகாரிகள் சீல் வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.