
இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் அவரது பங்கு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கான சேவைக்காக, ஜெனரல் அசிம் முனீர் பாகிஸ்தானின் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். இதனால், நாட்டின் மிக உயர்ந்த ராணுவ பதவிக்கு சொந்தக்காரரானார்.
ஆனால், இதனை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பாகிஸ்தான் தற்போது “காட்டுச் சட்டத்தால்” ஆளப்படுகிறது என்றும், அவருக்கு “பீல்ட் மார்ஷல்” பதவிக்குப் பதிலாக “ராஜா” பட்டமே பொருத்தமென்று சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இம்ரான் கான், தன்னுடன் எந்த ஒப்பந்தமும் நடைபெறவில்லை என கூறியதுடன், பாகிஸ்தானின் எதிர்கால நலனுக்காக ராணுவ அமைப்பு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் இப்போது சக்திவாய்ந்தவர்களுக்காக வெறும் மேடையா மட்டுமாக மாறிவிட்டதாகவும், சட்டம் பலவீனமானவர்களை மட்டுமே அடக்குகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சிறையில் அனுபவிக்கும் அவலங்களை பற்றியும் இம்ரான் கான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தனது வழக்கறிஞர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என யாரையும் சந்திக்க அனுமதி இல்லை என்றும், புத்தகங்கள் மற்றும் மருத்துவ உதவிகளும் மறுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
“நியாயம் மற்றும் ஜனநாயகம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன,” எனக் கூறிய இம்ரான் கான், கைபர் பக்துன்க்வா பகுதிகளில் நடக்கும் ட்ரோன் தாக்குதல்களை சுட்டிக்காட்டி, இது பொதுமக்களை இழப்பதற்கும் பயங்கரவாதத்தை மேலும் தூண்டுவதற்கும் வழிவகுக்கும் என கடுமையாக விமர்சித்துள்ளார். “உங்கள் சொந்த மக்களின் வீடுகளில் குண்டுகளை வீசாதீர்கள்” என அவரது உரையில் வெளிப்படையான எச்சரிக்கையும் இடம் பெற்றுள்ளது.