
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகிறார்கள். குறிப்பாக ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியாவின் கருப்பு பெட்டி என்று கூறியிருந்தார். அதோடு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் இல்லை எனில் அதை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலக அளவில் ஜனநாயகத்தில் மேம்பட்ட பல நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே அமலில் இருக்கிறது. எனவே EVM இயந்திரங்களை ரத்து செய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். நம்முடைய ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலை நிறுத்த நாமும் அதை நோக்கி செல்ல வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நடந்த முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை தழுவிய நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.