கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. விஜயவாடா நகர பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருந்து கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அரசு ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்கள் மூலமாக மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது. சில இடங்களில் வெள்ள நீர் வடிய தொடங்கியதால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் ஜேசிபியில் சென்று ஆய்வு நடத்தினார். விஜயவாடா மதுரா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சந்திரபாபு நாயுடு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ரயில் தண்டவாளத்தின் அருகே இருக்கும் பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அதே சமயம் திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசு மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும், முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.