ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று 14 நகரங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில் இன்று நேற்று நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது,

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் சொல்வது முற்றிலும் தவறான தகவல் என்றார்.

மேலும் கர்னல் சோபியா குர்ஷி  பாகிஸ்தானில் உள்ள ஆயுத கிடங்குகள், ரேடார் தளங்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் தொழில்நுட்ப தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. மேலும் சியால்கோட் தீவிரவாத முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்று கூறினார்.