ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில், ஒரு இளம்பெணை துஷ்பிரயோகம் செய்து, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நேர்ந்த இடத்தில் இருந்த போக்குவரத்து போலீசாரால் அந்த நபர் பிடிக்கப்பட்டார். அந்த பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், சம்பவத்தை மொபைலில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததுடன், தனக்கு நடந்ததை பற்றியும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில், சந்தேகத்திற்குரிய நபர், தொலைபேசியில் பேசுவது போல் நடித்துக்கொண்டு, அந்த பெண்ணிடம் அநாகரிகமாகவும் பாலியல்ரீதியாக ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசுவதைப் பார்க்க முடிகிறது. இந்த வார்த்தைகள் பல முறை அவரால் கூறப்பட்டதாகவும், அவர் உண்மையில் யாரிடமும் அழைப்பு செய்யவில்லை என்பதை அந்த பெண் நேரில் சென்று உறுதிப்படுத்தியதும் காணப்படுகிறது. அப்போது அருகில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து, ஜெய்ப்பூர் ஆர்பிஎஃப் தெரிவித்ததாவது, “சம்பவம் ரயில் நிலையம் வெளியே நிகழ்ந்தது என்பதால் இது சிவில் காவல்துறையின் பொறுப்பில் வருகிறது. இருப்பினும், ரயில்வே வளாகங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது. இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய நபர் சதர் காவல் நிலைய காவல்துறையால் BNSS சட்டத்தின் பிரிவு 126/170ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.