
நம் இந்திய சமூகத்தில், திருமணம் ஆன பெண்கள் அவர்களின் ஆதார் கார்டில் தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்றுவதில் பல சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இந்நிலையில் ஆதார் விவரங்களை எளிதாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றிய சில எளிய வழிமுறைகள் உள்ளன.
முதலில், உங்கள் ஆதார் அட்டையும், திருமண சான்றிதழையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். திருமண சான்றிதழை ஸ்கேன் செய்து அல்லது தெளிவான படம் எடுத்துக் கொண்டு வைத்துக்கொள்ளவும். இது உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் போது தேவையாக இருக்கும். இதற்குப் பிறகு, https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ ஆதார் இணையதளத்திற்கு செல்லவும். அங்கு உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.
அந்த இணையதளத்தில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP (ஒருமுறை கடவுச்சொல்) வரும். அதை உள்ளிட்டு உள்நுழையவும். உள்நுழைந்த பிறகு, வலது மேல் மூலையில் உங்கள் ஆதார் கணக்கின் விவரங்கள் திறக்கப்படும். இதில் உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், வீடு முகவரி, பிறந்த தேதி ஆகியவை மாற்றும் வாய்ப்பு இருக்கும். அங்கு நீங்கள் ‘பெயர் மாற்றம்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்றுங்கள்.
பெயர் மாற்றத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் மிகவும் முக்கியமானவை. உங்கள் கணவர் என நிரூபிக்கும் திருமண பதிவு சான்றிதழை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் 50 ரூபாயாக இருக்கும். கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் கோரிக்கைக்கான ஒரு அடையாள எண் வழங்கப்படும். அதை வைத்து உங்கள் பெயர் மாற்றம் குறித்து அப்டேட்களை பார்த்துக்கொள்ளலாம்.
புதிய ஆதார் கார்டு, உங்கள் முகவரிக்கு 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இதற்காக நீங்கள் நேரடியாக அடுத்துள்ள இ-சேவை மையம் அல்லது ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பிக்கவும் முடியும். அதற்கும், இப்போது சொல்லப்பட்டுள்ள கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.