அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர முடியாது. ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதெல்லாம் நம் ஆட்சிக்கு சரிபட்டு வராது. இதற்கு பல மாநிலங்கள் உதாரணங்களாக இருக்கிறது என்று கூறினார்.

அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நேற்று ஒரு வீடியோ வெளியிட்ட நிலையில் அதனை இருமுறை நீக்கினார். பின்னர் மீண்டும் அந்த வீடியோவை வெளியிட்டார். அதாவது ஆட்சி அதிகாரத்தில் என்றால் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்பது போல் திருமாவளவன் கேட்டிருந்த நிலையில் அது சர்ச்சையாக மாறியது.

இதற்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன் ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வருகிறோம் என்று கூறினார். அதோடு அந்த வீடியோவை தான் வெளியிடவில்லை எனவும் அட்மின் தான் வெளியிட்டதாகவும் விளக்கம் கொடுத்திருந்தார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு சீமான் உள்ளிட்டோர் ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் தான் தற்போது செல்லூர் ராஜு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கும் என்றும் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் பங்கு தர முடியாது என்பது போலும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.