
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்(32). இவரது மனைவி நிதி தேஷ்முக்(24). அரவிந்த் வேலை பார்க்கும் அதே பள்ளியில் தான் அவரது மனைவி நிதி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அரவிந்த் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நிதி தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 13ஆம் தேதி ஆன்லைனில் விஷமாத்திரங்களை வாங்கி அரவிந்த்துக்கு கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அரவிந்த் உயிரிழந்தார்.
அதன் பிறகு தனி ஆளாக கணவரின் உடலை அப்புறப்படுத்த முடியாததால் தன்னிடம் டியூஷன் படித்த சில சிறுவர்களை உதவிக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் உணர்வு பூர்வமாக பேசியதால் மூன்று சிறுவர்கள் அவருக்கு உதவி செய்தனர். நிதி சிறுவர்களுடன் இணைந்து அரவிந்தின் உடலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று வீசி உள்ளார்.
மறுநாள் காலை நிதி மீண்டும் சிறுவர்களுடன் அங்கு சென்று அரவிந்த்தின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் நிதி தனது கணவரை கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து மூன்று சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.