
மன்னார்குடியில் உள்ள முல்லைநகரைச் சேர்ந்த திருமுருகன் (40) என்ற தனியார் பள்ளி ஆசிரியர், தஞ்சாவூரில் ஒரு பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மனைவி உஷா, மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஜம்புநாதன், அவரது மகன் பாலகிருஷ்ணன் (38), மகள் ரோகிணி ஆகியோர், திருமுருகனுடன் நெருக்கமாக பழகியிருந்தது தெரியவந்தது.
ரோகிணிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, திருமுருகன் ரூ.15 லட்சம் பெற்றிருந்தார். ஆனால் வேலைக்குப் ஏற்பாடு செய்யாததோடு, பணத்தையும் முழுமையாக திருப்பிக் கொடுக்காததால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.11 லட்சம் திருப்பிக்கொடுத்திருந்தாலும், மீதமுள்ள பணத்தை கோரி தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாக தெரிகிறது.இந்த மன அழுத்தத்திலேயே திருமுருகன் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், தனது உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் ஜம்புநாதன், பாலகிருஷ்ணன், ரோகிணி மற்றும் அவர்களின் உறவினர் தாமராஜ் என திருமுருகன் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, மன்னார்குடி போலீசார் பாலகிருஷ்ணன், ரோகிணி, தாமராஜ் (62) ஆகியோரை கைது செய்துள்ளார்கள். மேலும், முக்கிய சந்தேகநபராகக் கருதப்படும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஜம்புநாதனை பிடிக்க சிறப்பு படையினரை அமைத்து தேடிவருகிறார்கள்.