உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் 75 வயது மூதாட்டி கௌசல்யா தேவி, வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) காலை வாக்கிங் சென்ற போது, எதிர்பாராத சோகம் நிகழ்ந்தது.

அதே பகுதியில் முகமது ஜாயித் என்பவர் வளர்த்து வந்த இரண்டு ராட்வீலர் இன நாய்கள், கவுசல்யா தேவியை  விரட்டி கடித்து தாக்கியுள்ளன. அருகிலிருந்தவர்கள் தலையில், கைகளில், கால்களில் கடும் காயங்களுடன் கிடந்த அவரை உடனே டூன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில், இரண்டு எலும்புகள் முறிந்து இருந்ததுடன், ஆழமான காயங்களுக்கு 200 தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கௌசல்யா தேவியின் மகன் உமாங் நிர்வால் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாய்களின் உரிமையாளரான நஃபீஸ் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். விசாரணையில் நஃபீஸ், ஆபத்தான நாய் இனங்களை வளர்க்க தேவையான நகராட்சி உரிமம் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து டேராடூனின் காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங் தெரிவித்ததாவது, “இனி உரிமம் இல்லாமல் ஆபத்தான நாய்களை வளர்ப்பவர்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து கண்காணிக்கும்” என உறுதியளித்துள்ளார். ராட்வீலர், பிட்புல் போன்ற நாய்களின் வளர்ப்பு பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு 23 வெளிநாட்டு இன நாய்களை இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனை செய்வதை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.