தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமைக்குழு ஒன்றை நடத்தி ஓபிஎஸ் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். இதனிடையே சமீபத்தில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி இருக்காது என்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியை தான் கொண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு கொசுக்களை பற்றி எல்லாம் பேசாதீர்கள், நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு, அதைப்பற்றி எல்லாம் கேட்காமல் இதைப் பற்றி கேட்கிறீர்கள், கொசுக்கள் பற்றி பேசுவதற்கு இதுவா நேரம் என்று ஓபிஎஸ்-ஐ தாக்கி பேசி இருந்தார்.

இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் என்ன பேசினாலும் பேசிக் கொண்டு போகட்டும். அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கொங்கு நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் கொங்கு நாட்டின் தங்கங்கள் என்று பேசிய ஓபிஎஸ்ஸிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உங்களை கொசு என்று விமர்சித்திருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சிரிப்பு போலீஸ் மாதிரி ஜெயக்குமார் ஒரு சிரிப்பு அரசியல்வாதி என்று கூறி ஓபிஎஸ் பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.