
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி. இவரது மனைவி ஜெயம்மா. இந்த தம்பதியினருக்கு உதய கிருஷ்ணா(34) என்ற மகன் உள்ளார். உதய கிருஷ்ணா குழந்தையாக இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் உதய கிருஷ்ணாவும், அவரது தம்பியும் பாட்டி ரமணமாவின் பராமரிப்பில் வளர்ந்தனர். பள்ளி படிக்கும்போது உதய கிருஷ்ணா காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு ஐபிஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இதனால் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ராமாயபட்டணத்தில் கடலோர காவல் படை கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். இதனையடுத்து பணியின் போது கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் ஒருவர் உதய கிருஷ்ணாவை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த உதய கிருஷ்ணா தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார். அதன் பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் விடுதியில் தங்கி 3 முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.
நான்காவது முறையாக உதய கிருஷ்ணா தேர்வு 780 ஆவது ரேங்க் எடுத்தார். இறுதியாக மீண்டும் தேர்வு எழுதி 350-ஆவது ரேங்க் எடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.