
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நான்கு வயது மகன் ஷிவாய் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தான். இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக அவனது சகோதரர் சுமித் பெற்றோரிடம் கூறியுள்ளான். பின்னர் ஒரு ஆசிரியர் ஷிவாயை வகுப்பறைக்கு அழைத்து சென்று உட்கார வைத்தார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் கோபத்தில் ஆசிரியர் சிறுவனை அடித்தார். இதில் சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதோடு வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது.
இதை தொடர்ந்து சிறுவன் அழுது கொண்டே தண்ணீர் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அந்த ஆசிரியர் தண்ணீர் கொடுக்க மறுத்த நிலையில் 10 நிமிடங்களுக்கு பிறகு குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதோடு சிறுவனின் அந்தரங்க உறுப்புகளிலும் காயம் இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அந்த பள்ளியில் உள்ள இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பிற மாணவர்களிடமும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.