கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி சிறிது நேரம் சென்றது.

அப்போது அருள் மூர்த்தி பேருந்தை தாறுமாறாக ஓட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரிடம் கேட்டனர். அப்போது அருள் மூர்த்தி மது போதையில் உளறியபடியே அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டியுள்ளார்.

இதனை பார்த்து பயணிகள் கூச்சலிட்டதால் அருள் மூர்த்தி நடுவழியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் மேல் படுத்து தூங்கிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்து அருள் மூர்த்தி மதுபோதையில் இருந்ததை உறுதி செய்தனர்.

அதன் பிறகு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்று போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.