
உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கலில்பூர் கிராமத்தில் அமித்-சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீமாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த லோகேந்திரா என்பவர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அமித் இருவரையும் கண்டித்த நிலையில் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் சீமா லோகேந்திரனுடன் பேசுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சீமா லோகேந்திராவை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் குளத்தின் அருகே சென்றார்.
அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் அமித் அவரது உறவினர்களுடன் அந்த இடத்திற்கு சென்று தன் மனைவி மற்றும் லோகேந்திராவை கையும் களவுமாக பிடித்தார். உடனடியாக லோகேந்திரா அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அமித் லோகேந்திராவின் தந்தையிடம் சென்று நடந்த விவரங்களை கூறியுள்ளார். ஆனால் அவரின் தந்தை தனது மகனை கண்டிப்பதற்கு பதிலாக அவரை அவதூறாக பேசினார்.
இதனால் அமீத் மனமுடைந்த நிலையில், வீட்டிற்கு சென்று அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடித்ததை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினர் சீமா, லோகேந்திரா மற்றும் அவரது தந்தை ஞானபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.