
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடியில் வாகை மலர்களுடன் போர் யானைகள் இருக்கிறது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் நிலையில் வாகைமலர் நடுவில் நட்சத்திரம் இருக்கிறது. அதன் எதிரே இரண்டு கோடி யானைகள் காலை தூக்கியபடி நிற்கிறது. அதாவது பொதுவாக பழங்காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்லும்போது வெற்றி வாகை சூடிய பிறகு அணிவது வாகை மலராகும்
இதனை மையமாக வைத்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் நடிகர் விஜய் கட்சி கொடியில் வாகை மலரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் கொடி அறிமுக விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அரை மணி நேரத்தில் விழா முடிவடைந்தது. அதோடு நடிகர் விஜயும் வெறும் 5 நிமிடங்கள் மட்டும்தான் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவரிடமும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று பாசமாக ஒரு வார்த்தை கூறினார். மேலும் நடிகர் விஜய் இவ்வளவு சிம்பிளாக ஒரு கட்சி விழாவை நடத்தி முடித்தது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.